Gopi Shankar Madurai called on Rt Hon Mark Field M.P Minister of State for Asia and the Pacific, U.K

Gopi Shankar Madurai handing over the Autobiography of Yogi book & the petition to Rt Hon Mark Field M.P
Gopi Shankar Madurai called on Rt Hon Mark Field M.P Minister of State for Asia and the Pacific, U.K to ensure the rights of people born and living with Intersex traits in the United Kingdom and The Commonwealth Nations. British Deputy High Commissioner Bharat Joshi accompanied the Minister at the British Deputy High Commission Office. Rt Hon Mark Field praised the activities of Srishti Madurai student volunteer LGBTQIA+ movement. The office of High Commissioner of United Nations Human Rights Council states that 1.6 percentage of the world’s population is born with intersex traits that approximately equal to 8/10th of Tamil speaking population in this world. Srishti Madurai has been fighting for the rights of such people in India, particularly Tamil Nadu. Just like female infanticide, there is something called intersex infanticide in India. Midwives in villages are forced to indulge in ending lives of babies born with immature genitals or intersex traits. In some cases, infants born with such traits are subjected to unwanted surgical intervention. Sex-selective surgeries are performed on them to convert them either into a male or female.

Selfie with BDHC Bharat Joshi & Rt Hon Mark Field PC: Mathivathani

பால், பாலினம்: அருந்ததிராயின் புரிதல் - கோபி ஷங்கர் (வலம் இதழ் August 2017 Published online on Oct 7 2017)



சமீபத்தில் பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய், ‘மினிஸ்ட்ரி ஆப் அட்மோஸ்ட் ஹாப்பினஸ்’ என்ற புத்தகத்தை வெளியிட்டார். இந்தப் புத்தகத்தில் மிக முக்கியமான கதாபாத்திரமான அன்ஜும் என்ற நபரின் வாழ்க்கையை மையப்படுத்தி தன்னுடைய அரசியல் நம்பிக்கைகளை வெளிப்படுத்தி உள்ளார். இந்தப் புத்தகத்தை பொருத்தவரை, ஒரு இடையிலிங்க நபரான கோபி ஷங்கராகிய நான், அருந்ததி ராயின், பால் மற்றும் பாலினப் புரிதல் பற்றிக் கேள்வி எழுப்புகிறேன்.

அன்ஜும் என்ற கதாபத்திரத்தின் பால் அடையாளத்தை மிகவும் கொச்சைப்படுத்தியும், மாற்றியும் அருந்ததி ராய் எழுதியுள்ளார். இதைக்குறித்து என் நெருங்கிய தோழியும் ஆர்கனேசேஷன் ஆஃப் இன்டர்செகஸ் நிறுவனரும் மிகவும் பிரபலமான இன்டர்செக்ஸ் ஆக்டிவிஸ்ட்டுமான (இடையிலிங்கப் பாலின ஆர்வலர்) ஹிடா விலோரியா என்னிடம் கூறியதாவது: “அருந்ததிராய் மிகவும் பிரபல எழுத்தாளர். ஆனால் இவ்வளவு பெரிய எழுத்தாளர் ஒரு ஆய்வுகூட இல்லாமல் இப்படி எழுதியிருக்கிறாரே, அது எனக்கு ஒரு பெரிய அதிர்ச்சியைக் கொடுக்கிறது. பயங்கரமான வலியையும் தருகிறது. ஏனென்றால், இண்டர்செக்ஸும் மாற்றுப்பாலினத்தவரும் திருநங்கைகளும் ஒன்றல்ல என்று நாம் இவ்வளவுநாள் போராடிக்கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் திடீரென்று வந்து இவ்வளவு பெரிய எழுத்தாளர் இப்படியெல்லாம் எழுதலாமா?”

அருந்ததி ராய் புக்கர் பரிசு வாங்கியிருப்பதால் எல்லாவற்றுக்கும் தான் ஒரு அத்தாரிட்டி என்று நினைத்துக்கொள்கிறார் போல. அதனால்தால் இப்படியெல்லாம் எழுதுகிறார். அவர் தன் நாவலில் குறிப்பிட்டிருக்கும் அன்ஜும் என்ற நபரின் பிறப்பு உறுப்பு மற்றும் பால் குறித்து எழுதும்போது, அதில் ஒரு தெளிவில்லை. ஹிஜ்ரா என அவரைக் குறிப்பிடுகிறார்.

இந்தியாவில் இருக்கிற பிராந்தியப் பாலினச் சிறுபான்மையர் பற்றி நான் கடந்த பத்துவருடங்களுக்கும் மேலாக ஆராய்ச்சி செய்து கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறேன், பல கருத்தரங்கங்களில் பேசி இருக்கிறேன். ‘மறைக்கப்பட்ட பக்கங்கள்’ என்ற பெயரில் புத்தகமாகவும் அது வெளிவந்திருக்கிறது. இதைப் பற்றி அமெரிக்காவில் இருக்கிற அறுபதுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் வகுப்பு எடுக்கிறேன். தற்போது என்னுடைய உடல்நிலை காரணமாக என்னால் பயணம் செய்ய முடிவில்லை என்பதால், அவர்கள் நான் இருக்கும் மதுரைக்கு வந்து இதைப் பற்றிப் படித்துவிட்டுப் போகிறார்கள். அப்படியிருக்கும்போது, இதைப் பற்றித் தெரிந்துகொள்ள அருந்ததிராய் எங்களைப் போன்றவர்களிடம் கேட்டிருக்கிருக்கலாம். ஏனென்றால் நான் ஒரு இண்டர்செக்ஸ் (இடையிலிங்கத்தவர்) நபர். என்னுடைய அடையாளத்தை வைத்து வருகிற ஒரு நபரைப் பற்றிய நாவலாக இருக்கிறது இது.

இந்நாவலில் இருப்பது உண்மைச் சம்பவம் அல்ல என்பது எனக்கும் தெரியும். இதில் நான் அருந்ததி ராயின் அரசியல் கோட்பாடுகளை, அரசியல் நம்பிக்கைகளைக் கேள்வி எழுப்பவில்லை. அது அவர் சுதந்திரம். இந்தியப் பிராந்தியப் பாலின சிறுபான்மையர் பற்றி நமக்கு ஒரு புரிதல் இருந்தால் மட்டுமே அருந்ததிராய் என்ன தவறு செய்திருக்கிறார் என்பதைப் அறிந்துகொள்ளமுடியும்.

பிறக்கும்போது நமக்கும் இருக்கும் பிறப்பு அடையாளத்தைப் பால் என்றும், வளரும்போது நாம் தேர்ந்தெடுக்கும் பால் அடையாளத்தைப் பாலினம் என்றும் கூறுகிறோம். இதை முதலில் தெளிவுபடுத்திக்கொள்வது நல்லது.

பால் என்பது ஒரு குழந்தை பிறக்கும்போது அதனுடைய பிறப்புறுப்பை வைத்து, அதாவது குரோமோசோம்களை வைத்து அல்லது ஃபினோடைப் ஜினோடைப் என்பதை வைத்து அக்குழந்தை ஆணா அல்லது பெண்ணா அல்லது இடையிலிங்கத்தவரா (இண்டர்செக்ஸ்) என்று நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு குழந்தை ஆண் பிறப்புறுப்போடு பிறந்தால் ஆண், பெண் உறுப்போடு பிறந்தால் பெண். இரு வேறு உறுப்புகளும் தெளிவில்லாமல் பிறந்தால் அந்தக் குழந்தை இன்டர்செஸ் (இடையிலிங்கத்தவர்) குழந்தை என்று சொல்கிறோம். இந்தக் குழந்தைக்கு XX அல்லது XY வகையில் குரோமோசோம்கள் இல்லாமல், 14 வேறுபட்ட வகைகளில் மாறுபட்டு அமையலாம்.

இவ்வகைக் குழந்தைகள் ஒரு வருடத்தில் பத்தாயிரம் வரை கொல்லப்படுகிறார்கள். பெண் சிசுக் கொலையைப் பற்றிப் பேசுவது மாதிரி இந்தக் குழந்தைகளின் கொலையைப் பற்றி நாம் பேசுவதில்லை. இதற்காகத்தான் நாங்கள் போராடிக்கொண்டிருக்கிறோம். இது சிசுக் கொலைகளை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் பத்து வருடங்களாக உழைத்துக்கொண்டிருக்கிறது. உலகச் சுகாதார அமைப்பும் இதற்கான அறிவிப்பை 25 வருடங்களுக்கு முன்னே வெளியிட்டிருக்கிறது. இந்தக் குழந்தைகளுக்கு அறுவைச் சிகிச்சை செய்யக்கூடாது என்று தெளிவாகச் சொல்லி இருக்கிறது.

பால் என்பதை நாம் முடிவு செய்து பிறப்பதில்லை. ஆணா, பெண்ணா என்பது நாம் முடிவுசெய்வது கிடையாது. அப்படியிருக்க திருநங்கைகள், திருநம்பிகள் என்னும்போது, ஒரு ஆணாக இருந்து பெண்ணாக மாறும்போதும், பெண்ணாக இருந்து ஆணாக மாறும்போதும், அவர்களுடைய குரோமோசோம்கள் மாறுவது கிடையாது. பெண் ஆணாக மாறி திருநம்பி என்றும், ஒரு ஆண் பெண்ணாக மாறி திருநங்கை என்றும் பாலின இருமைக் கொள்கையை நிறுவுகிறார்கள். இதனுள்ளே 58 பாலின அடையாளங்களுக்கு மேல் இருக்கின்றன. பால் வேறு, பாலினம் வேறு, பாலின ஈர்ப்பு என்பது வேறு.

இடையிலிங்கத்தவர் ஒருவர் தன்னை ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ, திருநங்கையாகவோ, திருநம்பியாகவோ அடையாளப்படுத்த விரும்புவதில்லை. பால்புதுமையினராகத் (genderqueer) தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பலாம். அதாவது ஆணாகப் பிறந்த எல்லோரும் ஆணாக வாழவேண்டிய அவசியம் கிடையாது. பிறக்கும்போது நமக்கும் இருக்கும் பிறப்பு அடையாளத்தை பால் என்றும், வளரும்போது நாம் தேர்ந்தெடுக்கும் பால்அடையாளத்தை பாலினம் என்றும் கூறுகிறோம்.

ஒரு சில இன்டர்செக்ஸ் (இடையிலிங்கத்தவர்) நபர்கள் தங்களை திருநங்கை என்றும் திருநம்பி என்றும் சொல்வதும் உண்டு. அது மிகச் சொற்ப அளவில் மட்டுமே. அறிவியல் ரீதியில் அதுவும் தவறாகத்தான் கருதப்படும். இந்த ஒரு சூழலில், பாரத நாட்டில் ஒரு கலாசாரம் பால் மற்றும் பாலின அடையாளத்தை மையப்படுத்தித் தோன்றுகிறது. ஒரு மொழி, ஒரு கலாசாரம், ஒரு குடும்பக் கட்டமைப்பு எல்லாமே ஒரு பாலினத்தின் அடிப்படையில் உருவாகின்றன. இவை எல்லாமே சுவாரஸியமான விஷயங்கள். உலகத்தில் எங்கேயுமே பாலினத்தை மையப்படுத்தி கடவுள் வந்தது கிடையது. இங்கே ஒரு பாலினத்தை மையப்படுத்தி கடவுள், பாலினத்தை மையப்படுத்தி அந்தக் கடவுளுக்கான விழாக்கள், பாலினத்தை மையப்படுத்தி ஒரு புதிய மொழி, பாலினத்தை மையப்படுத்தி ஒரு புதிய குடும்பக் கட்டமைப்பு தோன்றியிருக்கிறது. இது, புத்தர் பிறப்பதற்கு முன்பே, மஹாவீரர், சமணர்கள் வாழ்ந்ததற்கு முன்பே, கிட்டத்தட்ட 7,000 வருடங்களுக்கு முன்பே நிகழ்ந்த பழம்பெரும் கலாச்சாரம். இந்தியா முழுக்க முந்நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளும் பேச்சு வழக்குகளும் இருக்கலாம். அதேமாதிரிதான் இந்தப் பாலின சிறுபான்மைச் சமூகமும். இதில் உள்ளவர்கள் பிராந்தியத்துக்குப் பிராந்தியம் மாறுபடுகிறார்கள். பேசுகிற மொழி வேறு வேறு. ஆப்கானிஸ்தான் தொடங்கி பாகிஸ்தான், இந்தியாவில் மகாராஷ்டிரா, குஜராத் வரைக்கும் ஹிஜ்ரா என்று அழைக்கப்படுகிறார்கள். உத்திரபிரதேசம் மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளில் இவர்களை கின்னர் என்று சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் இவர்களை அரவாணிகள் என்று சொல்கிறோம். இவர்களை கேரளாவில் பகவதிகள், அதாவது பகவதி அம்மனை வழிபடுபவர்கள் என்று கூறுகிறார்கள். ஆந்திரபிரதேசத்தில் எல்லம்மாக்கள் என்றும், கர்நாடகத்தில் ஜெகப்பா என்றும், மேற்கு வங்கத்தில் சஹி பேகி என்றும், வடகிழக்குப் பகுதிகளில் நுபி மான்பி என்றும், ஒவ்வொரு பகுதிகளில் ஒவ்வொரு பெயர்களில் இவர்கள் அழைக்கப்படுகிறார்கள்.

இவர்களுக்கென விழாக்கள் இருக்கின்றன. உதாரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கூத்தாண்டவர் கோவிலில் அரவாணிகள் விழா மிகவும் பிரசித்திப்பெற்றது. அதைவிட முக்கியமானது, கோவா மற்றும் கொங்கன் பகுதியில் நடக்கிற மங்களமுஹி மேளம். நாற்பது நாட்கள் விரதம் இருந்து நடத்துவார்கள். அங்கு கொச்சையான எந்த ஒரு பாலியல் நடவடிக்கைகளும் இருக்காது.

பாலின சிறுபான்மையருக்கு ஒரு தேவதையாக, எங்களுக்கான ஒரு தேவியாக நாங்கள் பார்ப்பது பஜுரா தேவி மாதா. சேவல்மேல் அமர்ந்திருக்கிற ஒரு அம்மா. அந்த அம்மாதான் ஒரு பிரதான தேவதையாக எல்லாருக்கும் விளங்குகிறார்கள். இதைப் போல திருநம்பிகள் காடி என்னும் பழங்குடி இனத்தில் அங்கீகரிக்கப்படுகிறார்கள். இமயமலைக்குக் கீழே உள்ள சில பகுதிகளிலும் திபெத்திய கலாசாரங்களிலும் பெருவாரியாகக் காணப்படுகிறார்கள். இப்போதும் இருக்கிறது. இவ்வளவு பெரிய கலாசாரப் பின்னணியில்கூட இன்டர்செக்ஸ் (இடையிலிங்கத்தவர்) மக்களை இவர்கள் உள்ளே சேர்த்துக்கொள்ளவில்லை. ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர்களை மட்டுமே இவர்கள் சமூகத்தின் உள்ளே அனுமதித்தார்கள்.


ஒரு சில இடங்களில் இண்டர்செக்ஸ் குழந்தையாகப் பிறக்கிறவர்களை எடுத்து வளர்த்தாலும்கூட அவர்களுக்கென தனி பெயர் வைக்கிறார்கள். அந்தத் தனிப்பெயர் மா பேடி உசிலி. அவர்கள் பேசகிற மொழி ஹிஜ்ரா ஃபார்ஸி. இந்த மொழி, பார்ஸி, உருது, அரபி, சமஸ்கிருதம், பழங்குடி இனமக்கள் பேசுகின்ற மொழிகள் ஆகியவை கலந்து உருவான ஒரு மொழி. தென்னகத்தில் பேசுகிற மொழியை கௌடி பாஷை என்று சொல்லுவார்கள். இது தமிழ், தெலுங்க, கன்னடம், முக்கியமாக சமஸ்கிருதம், உருது, பிறகு பிரதான பழங்குடி இன மக்கள் பேசுகின்றகள் மொழி ஆகியவை சேர்ந்து உருவான ஒன்று. இதைத் தவிர்த்து அவர்களுக்கென்று ஒரு தனி சைகை மொழியும் இருக்கிறது. இவ்வளவு தனித்துவமான நிறைய விஷயங்கள் இருக்கிற சமூகத்தில் நிறைய மூடநம்பிக்கைகளும் உள்ளன என்பதையும் சொல்லத்தான் வேண்டும்.

அந்தச் சமூகத்தில் இண்டர்செக்ஸ் (இடையிலிங்கத்தவர்) மக்களுக்கென ஒரு பெயர் கொடுக்கிறார்கள். அது, அந்தர்லிங்வாஷிஸ். இவற்றில் எங்களுக்கு முக்கியமாக மூன்று பெயர்கள் கொடுக்கிறார்கள். அதில், மா பேடி ஹுசிலி என்பதுதான் மிகவும் பிரசித்தம். ஹிஜ்ரா சமூகத்தில் (அதாவது திருநங்கை அல்லது அரவாணி) இருக்கிறவர்கள் எங்களையே சாமியாகக் கும்பிடுவார்கள். ஏனென்றால், இடையிலிங்கத்தவர்களே உண்மையான மாற்றுப் பாலினத்தவர் என்று சொல்வார்கள். ஏனென்றால் நாங்கள் பிறக்கும்போதே ஆணுமில்லை, பெண்ணுமில்லை.

சங்க இலக்கியங்களில்கூட கொற்றவைக்குப் பூஜை செய்பவர்கள், இடையிலிங்கத்தவராக இருக்க வேண்டும். ஆணுமாக இருக்கக்கூடாது, பெண்ணுமாக இருக்கக்கூடாது. அப்படியிருக்கிறவர்கள்தான் பழங்காலத்தில் நிறைய பூஜை, வழிபாட்டு முறைகளை முன்னின்று நடத்தியிருக்கிறார்கள்.

இத்தனை வரலாறு இருக்கும்போது அவர்களைப் பற்றி அருந்ததிராய்க்கு எந்தப் புரிதலும் இல்லை. அருந்ததி ராயின் நாவலில் வரும் அன்ஜும் என்பவர் ஒரு இன்டர்செக்ஸ் நபர். அவரை ஹிஜ்ரா என்று அருந்ததி ராய் குறிப்பிடுவது ஒரு மிகப்பெரிய தவறு. கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக இடையிலிங்கத்தவர்கள் செய்து வரும் போராட்டங்கள் இதன் மூலம் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளது. ஹிஜ்ரா என்றால் வடமொழியில் அரவாணி என்று அர்த்தம். அன்ஜும் பிறக்கும்போது ஒரு ஆண் கிடையாது, பெண்ணும் கிடையாது. பிறக்கும்போதே அவர் ஒரு இண்டர்செக்ஸ் நபர். குறைந்தபட்சம் இதையாவது தெளிவுபடுத்தியிருக்க வேண்டும்.

அன்ஜும் என்ற கதாபாத்திரத்தை மையப்படுத்தித்தான் இந்தப் புத்தகமே எழுதப்பட்டுள்ளது. அப்படியிருக்கும்போது எழுத்தாளர் அருந்ததிராய் போன்ற ஒருவர், விருதெல்லாம் வாங்கியிருப்பவர், எழுதுவதை உலகம் நம்பும். ஒருவரின் எழுத்துக்குப் பின்னால் இருக்கிற எந்த ஒரு உசாத்துணைகளையும் (references) நாம் படிப்பதில்லை. அந்த மாதிரி ஒரு உலகத்தில் இருக்கிறோம். பார்க்கிறதெல்லாம் உண்மை, கேட்கிறதெல்லாம உண்மை என்கிற சூழலில்தான் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். நம்ம ஊடகங்கள் எல்லாம் அப்படித்தான் இருக்கிறது. பல அமெரிக்க ஊடகங்களில், சமூக ஊடகங்களில் அருந்ததிராய் பேசுகிறார். திரும்பத் திரும்ப ஹெர்மோஃப்ரோடைட் (Hermaphrodite) என்று சொல்கிறார். கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு முன்பே இதை நிறுத்தச் சொல்லி போராட்டம் எல்லாம் நடந்தது. ஒரு நாய் இருக்கிறது. அதை வுமன் டாக் என்று சொல்வோமா, ஃபிமேல் டாக் என்று சொல்வோமா? வுமன் என்பது மனிதர்களைக் குறிக்கிற சொல். அந்த மாதிரி வித்தியாசம்தான் ஹெர்மோஃப்ரோடைட் என்பதற்கும் ஹிஜ்ராக்கும் உள்ள வித்தியாசம்.

ஆங்கில இலக்கியத்தில் தேர்ச்சி பெற்ற ஒரு நபரானவர், எங்களைக் குறிக்கும் பால் மற்றும் பாலின வேறுபாடுகளைத் தெளிவுபடுத்தத் தவறிவிட்டார். ஒரு இண்டர்செக்ஸ் நபரைப் பற்றி எழுத அருந்ததி ராய் இண்டர்செக்ஸ் நபர் அல்ல. நான் இடையிலிங்கத்தவர்கள் பற்றி எழுதும் ஒரு இண்டர்செக்ஸ் மனிதன். எனவே னக்குத்தான் இதன் வலி புரியும். ஏனென்றால், எங்களைக் குறிப்பதற்கும் பொதுவான சொற்கள் உள்ளன. எங்களை He அல்லது She என்று குறிப்பிட மாட்டார்கள். மாறாக, Ze என்று குறிப்பார்கள். இதை ஆக்ஸ்போர்ட் அகராதியிலேயே சேர்க்க வைத்திருக்கிறோம். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகமே ‘பிறர்’ என்ற ஒரு தெரிவை என்னால்தான் கொண்டு வந்தது. அங்கே கலை மற்றும் நுண்கலையியல் படிப்பில் சேர முயன்றபோது, அவர்களிடம் பிறர் என்ற தெரிவு இல்லை. ஆண் அல்லது பெண் என்ற தெரிவு மட்டுமே இருந்தது. எனக்காக எல்லாத் துறைகளிலும் இருக்கிற மாணவர்களும் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.

ஒவ்வொரு விஷயமும் நாங்கள் போராடி பெற்றுக்கொண்டிருக்கிற இந்தத் தருணத்தில், எதை நாங்கள் இல்லை என்று சொல்கிறோமோ, அதுதான் நாங்கள் அவர் எழுதிவிட்டார். இதை எங்கள் போராட்டத்துக்கே ஒரு பெரிய பின்னடைவாகப் பார்க்கிறோம். இதை நான் மட்டும் சொல்லவில்லை. என்னுடன் சேர்ந்து கட்ரினா கர்காஸஸ் என்ற ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் மிகப்பெரிய இன்டர்செக்ஸ் அறிஞரும் சொல்கிறார். இவர் ஒரு பேராசிரியர், இண்டர்செக்ஸ் அத்தாரிட்டி, பால் நிர்ணயம் தொடர்பாக சர்வதேச விளையாட்டு நீதிமன்றத்தில் போராடியவர், இண்டர்செக்ஸில் சிறப்பாய்வு செய்த மானுடவியலாளர். இவர் மட்டுமல்ல, மற்றொரு முக்கியமான ஆக்ட்டிவிஸ்ட்டான ஹிடா விலோரியா, முதல் இண்டர்செக்ஸ் அரசியல்வாதியான டானி ப்ரஃபா உள்ளிட்ட பலர், உலகத்தின் பல பாகங்களில் இருந்தும் என் குரலை ஆமோதித்தார்கள். இது தொடர்பாக நான் வெளியிட்டிருந்த டிவிட்டில் இவர்கள் மறுமொழி அளித்திருந்தார்கள்.

அருந்ததிராய் தன் நாவலில் எதைப்பற்றி எழுதவேண்டும் என்று நான் பேசவில்லை என்பதைத் தெளிவுபடுத்திவிடுகிறேன். அருந்ததிராயை யாராவது ஒருவர் வாடா போடா என்றும் அவர் ஒரு ஆண் என்றும் சொன்னால் அருந்ததிராய்க்கு எவ்வளவு கோபம் வருமோ, அது மாதிரி அவர் என் பாலினத்தைப் பற்றிச் சொல்லும்போது, எனக்கு அவரைவிடவும் கோபம் வருகிறது.

என்னுடைய பால், பாலின அடையாளமானது என்னுடைய வாழ்க்கையின் மிக முக்கியமான அம்சம். அதை உணர்ந்துதான் நான் என்னுடைய வாழ்க்கையை வாழ்கிறேன். ஆனால் நான் அது மட்டும் கிடையாது என்றாலும் அது என் வாழ்க்கையின் முக்கியமான அம்சம். ஒரு ஆணைப் பார்த்துப் பொட்டை என்று சொன்னால் அவருக்குக் கோபம் வரும். அதேமாதிரி ஒரு பெண்ணை வேறு ஏதாவது சொன்னால் கோபம் வரும். அதுவேதான் எங்களுக்கும். இல்லாத ஒன்றை எங்களை நோக்கிச் சொல்லும்போது எனக்கும் கோபம் வருகிறது. இதை நான் ஒரு பெரிய பின்னடைவாகப் பார்க்கிறேன். அருந்ததிராய் தன் நாவலில் யார் இன்டர்செக்ஸ், யார் ஹிஜ்ரா என்று ஒரு தெளிவான வரையறையைக் கொடுத்திருந்தால் இந்த பிரச்சினையே வந்திருக்காது. எங்களைப் புரிந்துகொண்டால் மட்டுமே எங்களது வேதனைகளையும் வலிகளையும் புரிந்துகொள்ளமுடியும்.

Link: பால், பாலினம்: அருந்ததிராயின் புரிதல் - கோபி ஷங்கர் (Original Link)