அமெரிக்காவின் இன்றைய பிரச்சினை-பாரக் ஒபாமா



காதல், காமம், நட்பு, பாசம், பாலினம் இதை கடந்த அன்பில் இரு மனம் திளைத்து ஒன்றாவதே திருமணத்தின் லட்சியம். ஆனால் பெரும்பாலும் ஆண்-பெண் உறவுகளை மட்டும் அங்கீகரிக்க கற்று கொண்ட நாம் அவர்களை போலவே நம்முடன் வாழும் பிற பாலினத்தவரின் உணர்வையும் உறவு முறையையும் பெரும்பாலும் அங்கீகரிப்பதில்லை. ஆண் பெண் தவிர்த்து இருபதிற்கும்(20) மேற்பட்ட பாலினங்கள் உள்ளன. இதை தூக்கி கொண்டாடிய நாடுகளுள் முன்னொரு காலத்தில் நம் தேசம் முன்னிலை வகித்தது. 


ஆனால் இவை எல்லாம் தலை கீழாக மாறிவிட்ட இந்நிலையில் இன்று வளர்ச்சியடைந்த நாடாக பேசப்படும் அமெரிக்கா முதல் முறையாக மதத்தை சார்ந்த நாடாக அல்லாமல் மனித நேயம் சார்ந்து யோசிக்க துவங்கியிருக்கிறது.

மே 9 ,2012 அன்று , அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா அவர்கள் வெளியிட்ட செய்தி உலக நாடுகளில் பலருக்கு அதிர்ச்சியையும் சிலருக்கு மகிழச்சியையும் கொடுத்தது. அது அமெரிக்க வரலாறு மற்றும் அமெரிக்க கூட்டாட்சி முறையின் ஜனாதிபதிகளுள் முதல் ஜனாதிபதியாக ஒபாமா , ஒரு பால் ஈர்ப்புடயோரின் வாழ்க்கை முறையையும் திருமணத்தையும் சமூக ரீதியாக மற்றும் சட்ட ரீதியாக அங்கீகரிக்க வேண்டும் என்று குரல் எழுப்பியது.மேலும் அவர்களின் உரிமைகள் காக்கப்படவேண்டும். பாலின மற்றும் மத ரீதியான வேறுபாடுகளை கடந்து அவர்களும் மனிதர்களே!. மனித நேயத்தின் அடிப்படையில் அவர்களுக்கு சம உரிமைகள் வழங்கப்பட்டால் தான் முழுமையான சமூகத்தை நாம் உருவாக்க முடியும். எதிர்பாலினரின் உறவு முறை, வாழ்க்கை முறை ,அவர்களின் குழந்தை வளர்ப்பு, மற்றும் இதர நல் விழுமியங்கள் போலவே ஒருபாலின உறவு ,வாழ்க்கை முறை மற்றும் குழந்தை வளர்ப்பு சார்ந்த விஷயங்கள் அமைந்திருக்கின்றன. ஆதலால் இதை தவறு என்றோ சமூக சீர்குலைவு என்றோ பார்க்க வேண்டாம் என்றார்.







ஒருபால் ஈர்ப்புடயோரின் சமூக நலன் கருதி மாத்யு ஷெபர்ட் வெறுப்பு குற்றங்கள் தடுப்புச்சட்டம் (Mathew Shepard hate crime prevention act,2009), பாலின ரீதியான வேறுபாடு கடந்து விருப்பமுள்ள ஒருபால் ஈர்ப்புடயோருக்கு நாட்டின் பாதுகாப்பு படை, எல்லை படை மற்றும் அனைத்து வேலைகளிலும் உரிமை வழங்கியது மற்றும் அவர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டங்கள் முதல் பல நல்ல திட்டங்களை ஒபாமா தனது ஆட்சி முறையில் நிறைவேற்றினார். பாலியல் ரீதியான பாகுபாடுகளை(sexual discrimination) தவிர்க்கும் சட்டங்களை இருபத்துஓன்று அமெரிக்க மாகணங்களும் , பாலின ரீதியான பாகுபாடுகளை(gender discrimination) தவிர்க்க பதினாறு மாகாணங்களும் மற்றும் வாஷிங்டன் டி.சீ - யும் நிறைவேற்றியுள்ளது. இதை தவிர்த்து ஆறு மாகாணங்கள் மற்றும் வாஷிங்டன் டி.சீ - யும் ஒருபால் திருமணங்களை(same sex marriage) அங்கீகரித்துள்ளது.

இது ஒரு புறம் இருக்க கலிபோர்னியா மாகாணத்தில் ஒரு பால் ஈர்ப்புடயோரின் திருமண உரிமைகள் குறித்து தெளிவற்ற நிலவரம், அமெரிக்கா முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது . 1977 ஆம் ஆண்டு கலிபோர்னியா குடியுரிமை சட்டத்தின்(4100) படி திருமணம் என்பது "பொது ஒப்பந்தத்தின் பெயரில் எழும் ஒரு தனிப்பட உறவாகும். மற்றும் இதில் அந்த பொது ஒப்பந்தத்தினை உருவாக்கும் நபர்களின் ஒத்துழைப்பு அவசியமாகும்" என்பதே அதன் வரைமுறையாகும் .ஆனால் பால் மற்றும் பாலினம் சார்பற்ற இந்த சட்டத்தினால் ஒரு பால் ஈர்ப்புடயோர் திருமண உறவில் நுழைய முடியும் என்பது கண்டு கலிபோர்னியா சட்டமன்றம் 1977 ஆம் ஆண்டே அரசியல் வரையறையினை திருத்தியமைத்தது . ஆனால் 1992 ஆம் ஆண்டு "திருமணம்" என்பதன் வரையறை குடும்ப விதிகள் 300-ற்கு மாற்றப்பட்டது. இந்த சட்டத்தின் படி திருமணம் என்பது "ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே பரஸ்பர சம்மதத்தின் அடிப்படையில் எழும் ஒரு பொது ஒப்பந்தமாகும்" . ஆயினும் 308 ஆம் பகுதியின் படி கலிபோர்னியா மாகாணமானது வேறு மாகாணங்களில் நிகழ்ந்த ஒருபால் ஈர்ப்புடயோரின் திருமணங்களை அங்கீகரித்தது. இத்தகு அம்சத்தினை எதிர்க்கும் விதமாய் கூற்று 22 , 2000 கலிபோர்னியாவின் சட்டத்தில் கொண்டுவரப்பட்டது.

ஆனால் 2004 ஆம் ஆண்டு சான் பிரான்சிஸ்கோ நகர மேயர் கவின் நேவ்சொம்(Kevin Nawsom) முதல் முறையாக கலிபோர்னியா மாகாணத்தில் ஒரு அன்பினற்செல்வி(lesbian) தம்பதியினருக்கு ஒரு பால் திருமண உரிமத்தினை வழங்கினார். மேலும் சண் ஜோஸ் நகர சபை , நகர ஊழியர்களுக்காக பிற சட்ட அமைப்புகள் அங்கீகரித்த ஒருபால் திருமணங்களை அங்கீகரிப்பது என்ற தீர்மானத்தையும் கொண்டு வந்தது. இத்தகு நடவடிக்கைகள் கலிபோர்னியா உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு உள்ளாகியது .


ஆனால் .2005 ஆம் ஆண்டு இன் ரீ திருமண(In Re marriage) வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்பானது கலிபோர்னியா சட்டம் சிரத்து ஒன்று பிரிவு ஏழின் படி (article 1,section 7) "திருமணம் என்பது மக்களின் அடிப்படை உரிமையாகும் " என்பதனை சுட்டிக்காட்டி, ஒரு பால் திருமணங்களை அங்கீகரித்தது. இது ஜூன் 16,2008 இல் நடைமுறைக்கு வந்தது. ஆனால் சிரத்து ஓன்று, பிரிவு ஏழில் புதிதாக நிபந்தனை 7.5 இணை கொண்டுவர வேண்டும் என்று , பிரேரேபணை 8 (Proposition 8) என்ற புது மாறுதலை நிர்பந்தித்து. இதன் படி " ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள திருமணம் மட்டுமே கலிபோர்னியா மாகாணத்தில் அங்கீகரிக்கப்படும்" என்ற விதியினை சேர்க்க வலியுறுத்தியது. நவம்பர் 4 ஆம் தேதி இந்த சட்டம் கலிபோர்னியா மாகாண உச்ச நீதிமன்றத்தால் நிறைவேற்றபட்டது . உடனடியாக நவம்பர் 5 தேதி ஒருபால் திருமணங்கள் தடை செய்யப்பட்டன.

ஆனால் முன்பு அங்கீகரிகப்பட்ட ஒரே பால் ஈர்ப்புடயோர் திருமணங்களுக்கு இந்த புது சட்டத்தால் எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்று முன்மொழியப்பட்டது. திருப்புமுனையாக ஆகஸ்ட் 4,2010 நீதிபதி வால்கர் , ஒரு பால் திருமணம் மீது பிரேரேபணை 8(Proposition 8) விதித்த தடை ,சட்ட சாசனத்திற்கு எதிரானது என்ற தீர்ப்பினை அளித்தார். ஆனால் அதற்கு மேல் முறையீடு செய்வதற்கு தடா விதிக்கப்பட்டது. மேயர் அர்நால்ட் மற்றும் அரசு வழக்கறிஞர் ஜெர்ரி பிரவுன் , நீதிபதி வால்கரிடம் தடாவினை அகற்றுமாறு கேட்டு கொண்டதன் படி நீதிபதி வால்கர் இந்த வழக்கினை ஒன்பதாம் சுற்று முறையீடு நீதிமன்றத்திற்கு மாற்றுகையில் இந்த வழக்கு வரும் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியின் தேர்வுக்கான வேலை மும்முரமாகும் நிலையில் ஒபாமா ஒருபால் திருமணங்களுக்கு விடுத்திருக்கும் ஆதரவு ,பல்வேறு காரணங்களை பின்னடக்கியுள்ளது.


கற்சுவர் கிளர்ச்சி


ஹார்வே மில்க்
உலகில் முதல் முதலில் நியூயோர்க்கில் ஒருபால் ஈர்புடயோருக்காக எழுந்த மிக பெரும் கற்சுவர் கிளர்ச்சியிலிருந்து (stonewall riots) , ஒருபால் ஈர்புடயோர் சமூகத்திலிருந்து வெளிப்படையாக முதல் முறை அமெரிக்க அரசியலில் உயர் பதவி வகித்த ஹார்வே மில்க்கின் புரட்சி வரை, அமெரிக்க அரசின் கைகளில் இவ்விஷயம் பகடைகளாகத்தான் உள்ளது.1996 ஆம் ஆண்டு ஒருபால் ஈர்ப்புடயோரின் திருமணத்தை ஆதரித்த ஒபாமா, 2004 ஆம் ஆண்டு "நான் நம்புவதெல்லாம், திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே நிகழ்வது" என்று மாறுபட்ட அறிக்கை விடுத்தார். இன்று குடியரசு கட்சி சார்பில் ஒபாமாவை எதிர்த்து போட்டியிடும் மிட்ட ரோம்ன கூறுவதும் இதுவே!.


அரசியல் காரணங்களுக்காக அரசியல்வாதிகள் மாறலாம். மனித நேயம் தொடர்புடைய இந்த விஷயத்தை அமெரிக்கா அரசியலாக்கக்கூடாது. பாலின மற்றும் பாலுணர்வு தொடர்பான விஷயங்களை குறித்து முழு அறிவு இல்லாமல், அதை கையாளுவது பல எதிர் மறையான செயல்களுக்கு வித்திடும். மதமும் சட்டமும் மனிதனுக்காகவே தவிர்த்து, மனிதன் மதத்திற்காகவும் சட்டத்திற்காகவும் இல்லை.!

No comments:

Post a Comment